The Talkie
Monday, June 1, 2026
  • Login
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
No Result
View All Result
The Talkie
Subscribe
Home கட்டுரைகள் உலகத் திரைப்படங்கள்

கடவுள்களால் செதுக்கப்பட்ட இடம் – Sirat 2025 spain

The Talkie by The Talkie
June 1, 2026
in உலகத் திரைப்படங்கள், கட்டுரைகள்
A A
0
Share on WhatsappShare on FacebookShare on Twitter

    Author Icon     கிருஷ்ணப்ரசாத்

கதையின் நாயகன் லூயிஸ், தன் மகளைத் தேடி, மொரோக்கோ பாலைவனத்தில் அலைந்து திரிகிறான். தனியாக அலையாமல் தன் மகனுடன் அலைகிறான். கதை இதுதான் என்றாலும் படம் முன்வைக்கும் கேள்வி, “நாம் உண்மையிலேயே இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோமா?” என்பதே. காணாமல் போன மகளைத் தேடும் ஒரு தந்தையின் பயணமென்னும் த்ரில்லராக படம் தொடங்குகிறது என்றாலும் திடீரென்று ஒரு விசித்திர உலகிற்குள்ளே நம்மை இழுத்துச்செல்லும் அனுபவமாக திரைக்கதை மெதுவாக ஏன் உருமாறுகிறது?

‘சிராத்’ என்பதொரு அரேபிய இஸ்லாமிய மரபுச்சொல். ஒன்றுக்கும் மேற்பட்ட தத்துவார்த்த அர்த்தங்கள் இருக்கும் சொல். ‘ஆன்மாவின் இறுதிப் பயணம்’ என்பது அதிலொன்று. ‘எரிந்துகொண்டிருக்கும் நரகத்தில் இருந்து  சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் வாளைவிடக் கூர்மையான ஒரு பாதை’ என்பது ஒன்று. இப்படத்தில் அந்தப் பாலம் ஓர் உருவகமாக வருகிறது. இறந்த பின்னர் ஆன்மாக்கள் கடக்கும் பாதை என்றும், சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே இருக்கும் வழி என்றும் ,பாவிகள் இதிலிருந்து நரக நெருப்பில் விழுவதும், நல்லவர்கள் நடந்து சொர்க்கத்திற்கு சென்றடைவர் என்றும் ஏகப்பட்ட மரபுக்கதைகள் சொல்லப்படுகின்றன. அப்படியொரு பயணத்தின் நவீன வடிவமாகத்தான் தனது குடும்பத்தை மீட்பதற்கான நாயகனின் பரிதவிப்பு. பாதையின் முடிவில் நாயகன் சொர்க்கத்தைக் கண்டடைகிறானா? அல்லது சொர்க்கமென்று அவன் எதைக் கண்டடைகிறான்? இயக்குனரின் பார்வையில் சொர்க்கம் என்றால் என்ன? நாயகனின் பயணம் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்கு எப்படிப் பயணப்படுகிறது? என்பதே சிராத் என்ற ஸ்பானியப் படத்தின் திரைக்கதை.

படத்தின் கதாபாத்திரங்கள் வசனங்களால் உரையாடுவதைவிட தங்களின் உடல்மொழியால்தான் அதிகம் பேசுகிறார்கள். படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி மிகவும் பயங்கரமானது. இந்த ஒரேயொரு காட்சியின் அனுபவத்திற்காகவே ஒரு சினிமா ரசிகன் இந்த படத்தை பார்க்கவேண்டும். ‘பேய் பிடித்த காட்சி’ என்று அதை இயக்குனர் அழைக்கிறார். அந்தக் காட்சியைத் திரைக்கதையாக எழுதும்போதே அவருக்குக் கை நடுங்கியிருக்கிறது. படத்தொகுப்பின்போதும், ஒலி வடிவமைப்பின்போதும் தொடர்ந்து படக்குழுவினருக்கும் இயக்குனருக்கும் மனவேதனையைக் கொடுத்த காட்சியாக அது உருவாகியிருக்கிறது. தயாரிப்பு நிறுவனம், அந்தக் குறிப்பிட்ட காட்சியை ஏதோ காரணம் சொல்லி ‘ரிஸ்க்’ என்று எச்சரித்துத் தூக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால் லாக்ஸ், அவர்கள் எல்லோரையும் மறுத்து, “இதுதான் உண்மை; இதைக் காட்டியே ஆக வேண்டும். என்னுடைய கடைசிப் படமாக இது இருந்தாலும் பரவாயில்லை. இந்த காட்சியை உள்ளே வைத்தே படத்தை வெளியிடுவோம்” என்று வாதிட்டு காட்சியைப் படத்தில் வைத்திருக்கிறார். பாலைவனம், மலை, நெருப்பு எல்லாம் உயிர்ப்புள்ள தெய்வீகச் சக்திகளை போல ஒரு நொடி தோன்றிவிடும். மனிதன் அங்கு அந்நியன். அவனது ஓட்டங்கள், தேடல்கள் அத்தனையும் வீண் என்று தோன்றுமளவிற்கு இயக்குநர் லாக்ஸ், அந்த  காட்சியில் ஒரு புனிதச் சடங்கையே நிகழ்த்தியிருக்கிறார். இப்போது உலகம் முழுக்கப் பேசப்படுகிறது.  

மகளைத் தேடும் தந்தையின் பயணம் என்பது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. ஏனென்றால் ஒரு கட்டத்தில் முதன்மை நோக்கத்தையே மறந்து, படம் வேறொன்றாக மாறுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரைத் தேடும் பயணம் எப்படி படிப்படியாக இருத்தலியல் தேடலாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது. இன்றைய உலகின் நெருக்கடிகளான போர், குடியேற்றம், சமூகச் சிதைவு ஆகியவற்றின் பின்னணியில் எழுதப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம். மனதின் பகுத்தறியும் தன்மையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, உணர்வுகள் வழியே திரைக்கதையை அனுபவிக்கும் படமாக இதை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆலிவர் லாக்ஸ்.  மொராக்கோ பாலைவனத்தின் வழியே மேற்கொள்ளப்படும் இந்தப் பயணம், நம் அகத்தை நோக்கியதொரு பயணம்.

நமது அசிங்கங்களுடனும் காயங்களுடனும் கடக்கும் ஒரு பயண அனுபவமாக இருப்பதனால்தான் இந்தப் படம் உலக சினிமா ரசிகர்களிடையே பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். பாலைவனத்தின் வெறுமையை உணர வேண்டும் என்பதற்காக மெதுவாக நகர்த்தி பின்னர் நிகழும் அதிர்ச்சியான காட்சிகள் என்று திரைக்கதையை அடுக்கியிருப்பதால், முக்கியமான காட்சிகள் எல்லாம் ஆற்றல்மிக்க காட்சிகளாக மாறுகின்றன. இயக்குனர் லாக்ஸ், சந்தியாகோ என்பவருடன் இணைந்து சிராத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.  பத்தாண்டுகளாக இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. வெறும் 50 பக்கங்கள் மட்டுமே உள்ளதொரு திரைக்கதை. முதல் காட்சியே அதிர்ச்சி. 20 நிமிட நீளமான ரேவ் காட்சி. ஒளி, ஒலி, நடனம் என என்னால் மூச்சு விட முடியாத காட்சி. அதன் பின்னர்தான் படத்தில் பாலைவனம் வருகிறது. மிக அமைதியான, பிரமாண்டமான பாலைவனம். திரைக்கதையின் இந்த தொகுப்பு ஓர் அற்புதமான கதைசொல்லல்.

பாலைவனம் மற்றும் அதன் மிச்சங்களை ஒளிப்பதிவாளர் மௌரோ ஹெர்ஸ் ஒளிப்பதிவு செய்த விதமும் அதனால் வருமொரு  பழமையான உணர்வும் படத்திற்கு மிகப் பெரும் பலங்கள். ஹெர்ஸின் ஒளிப்பதிவில் படம் முழுக்க நிலையான ஸ்டேட்டிக் ஷாட்களும் சில மெதுவான பேன் ஷாட்களும் இருப்பதால் அனுபவரீதியில் ஒரு தியான உணர்வை இந்தத் திரைப்படம் தருகிறது. இயக்குனர் ஆலிவர் லாக்ஸ் ஒரு பொய் சொல்கிறார். ஆனால் அந்தப் பொய் உண்மையைவிட அழகாக இருக்கிறது. இயக்குநர் லாக்ஸ், மொராக்கோ பாலைவனத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கிறார். அவர் பெயர் நாதியா அசிமி. இந்தப் படத்தின் கரு அங்குதான் தொடங்கியிருக்கிறது. நாதியா வாழும் வாழ்க்கையை கவனித்த இயக்குனர், அந்த வாழ்வியலை அப்படியே சினிமாவாக்க எண்ணியதுதான் இந்தக் கதைக்கான விதை. இப்படிப்பட்ட ஒரு கதையை அறிவுப்பூர்வமாகச் சொல்லாமல் உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமில்லை…

ஸ்மார்ட் ஃபோன் மற்றும் தொலைக்காட்சியின் ஆதிக்கம்தான் இன்றைய சினிமாவின் ஆகப் பெரும் நெருக்கடி. இன்றைய படங்களை ஒரு விமானத்தில் பார்ப்பதற்கும் திரையரங்கில் பார்ப்பதற்கும் எந்தவிதமான பெரிய வேறுபாடுமில்லை. தொலைக்காட்சிப் படங்கள் போலத்தான் திரைப்படங்களும் இருக்கின்றன. ஒரு சினிமாட்டிக் காட்சிகூட இப்போது வெளிவரும் திரைப்படங்களில் இல்லை என்று உணர்ந்ததால் இதற்கு எதிரான கிளர்ச்சியை சிராத் படத்தின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர். திரையரங்க அனுபவத்தை நிலைநாட்டும் முயற்சியாக பிரத்யேகமான ஒளி ஒலி வடிவமைப்பு கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் லாக்ஸ். “நான் உண்மையிலேயே மரணத்தைப் பற்றிய ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன்” என்கிறார். இவர் உளவியல் சிகிச்சையும் படித்துவருகிறார். கெஸ்டால்ட் சிகிச்சை முறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

படத்தின் மிகப் பெரிய சவால் ரேவ் காட்சிதான். உண்மையாகவே நிகழ்வது போன்ற ரேவ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ‘ட்ராக்கர்ஸ்’ மற்றும் ‘டிராப் இன் கேரவன்’ என்ற இரண்டு ரேவர்  கூட்டமைப்புகள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து படக்குழுவிற்கு உதவியிருக்கின்றன. மூன்று நாட்கள் தொடர்ந்து இசையை அந்தப் பாலைவனத்தில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். சுமார் 1000 பேர் பங்கேற்று நிஜமான நிகழ்வின் சூழலை உருவாக்க, சினிமா விளக்குகள் தவிர்க்கப்பட்டு, ஒளி அலைகளை மலைகளில் மோதவிட்டு, கண்ணாடி டம்ளர்களில்கூட ஒளி அலைகளை ஒளிர விட்டு… இயக்குநருக்கு இதுவொரு ‘ஃபிராங்கன்ஸ்டைன் பரிசோதனை’ செய்ததைப் போன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறது. முழுப் படமும் மொராக்கோவில் எடுக்கத்தான் முதலில்  திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஸ்பானிய அரசு, நிதி உதவி கொடுப்பதற்கு முன்பு படக்குழுவிற்கு ஒரு நிபந்தனை  விதித்திருக்கிறது. அதாவது ‘படத்தின் 30% காட்சிகள் ஸ்பெயினில் எடுக்கப்பட வேண்டும்’ என்பது. இது படக்குழுவிற்குப் பெரும் சவாலாக அமைந்துவிட்டது.

முதலில், ஸ்பெயினில் மொராக்கோ போன்ற இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அதே போன்று தளத்தை உருவாக்கவேண்டும். ஆனால், கடுமையான லொகேஷன் வேட்டைக்கு பின்னர் ‘லாஸ் மொனெக்ரோஸ்’ பாலைவனம் படப்பிடிப்பிற்காகப் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் ‘ராம்ப்லா டி பாராச்சினா’ மலைப் பகுதியின் ஒரு செம்மண் பள்ளத்தாக்குதான் மொரோக்கோ பாலைவனத்திற்கு டூப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.  பாராச்சினாவை ‘கடவுள்களால் செதுக்கப்பட்ட இடம்’ என்று சொல்கிறார் இயக்குனர் லாக்ஸ். இவ்வளவு நடந்தும் நமக்கு எல்லாமே மொரோக்கோவாகத்தான் தெரிந்தது. மொரோக்கோ, ஸ்பெயின் நிலப்பரப்பில் காலங்காலமாக வாழும் உள்ளூர்வாசிகளுக்கு வேண்டுமானால் நுட்பமான வித்தியாசங்கள் தெரிந்திருக்கக்கூடும். “என்னடா இது? ஸ்பெயின்ல இருந்து இரண்டடில இடது பக்கம் தடுக்கி விழுந்தா மொரோக்கோ சகாரா வந்துடுச்சி?” என்று அவர்கள் வேண்டுமானால் அங்கலாய்த்துக்கொள்ளலாம். நமக்கோ முழுப்படமும் மொரோக்கோவினுள்தான் பயணம். நாதியா அசிமி தன் வாழ்க்கையின் எட்டு ஆண்டுகளை இதற்காகக் கொடுத்தார். அவரும் லாக்ஸும் இணைந்து கதையை உருவாக்கினர். பின்னர் சந்தியாகோ ஃபில்லோல் என்பவருடன் சேர்ந்து லாக்ஸ் திரைக்கதையை எழுதி முடித்தார்.

மொராக்கோவில் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டு, மணற்புயலால் லென்ஸ்கள் உடைக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் சில  காட்சிகள் படமாக்கப்பட்டு, அசாத்தியமான சவால்களை எதிர்கொண்டு படத்தை உருவாக்கி முடித்திருக்கிறார் இயக்குனர். ஆலிவர் லாக்ஸினுடைய முந்தைய படங்களைப் போலவே இதிலும் அவருடைய தீவிரமான ஆன்மிகத் தேடல் உள்ளது. ஆனால், இது அவருடைய மிக முதிர்ச்சியான திரைப்படம். ஒழுக்கம் என்பது மிக மெல்லிய திரை. பாலைவனம் அந்தத் திரையைக் கிழிக்கிறது. மனிதன் அங்கே தனது உண்மையான  வெறுமையான சுயத்தை எதிர்கொள்கிறான்.  இந்தப் படத்தை பார்க்கும்பொழுது நான் அனுபவித்த கரிசல் காடுகள்தான் எனது நினைவுக்கு வருகின்றன. மக்களின் வாழ்வியல் வேறு, இடம் வேறு ஆனால் வெம்மையும் உணர்வும் ஒன்று. காணாமல் போன மகளைத் தேடும் தந்தையின் தவிப்பு உலகம் முழுவதும் ஒன்று. மகளை இழந்த துக்கம் மொழி கடந்தது. படத்தில் காட்டப்படும் பாலைவனம், கதையின் பயணம், கதாபாத்திரத்தின் தேடலை, கதையாக இயக்குநர் லாக்ஸ் சொன்னவிதம் எல்லாமே நமது நனவிலி மனதின் பிரதிபலிப்பு போன்ற உணர்வைக் கொடுக்கும். சிராத் என்ற இந்தப் படம் நிச்சயம் பார்வையாளனை ஓர் உளவியல் பகுப்பாய்வில் ஈடுபடுத்தும். 

ஸ்பானிய சமூகத்தின் ஓரங்களில் வாழும் பாத்திரங்களின் வாழ்வியலைக் கதையினூடே சொல்லியிருப்பதே சாண்டியாகோ, லாக்ஸ் எழுதிய இந்த திரைக்கதையின் அரசியல் அறிக்கை. மொரோக்கோ மக்கள், எலக்ட்ரானிக் இசையைக் கேட்டுக்கொண்டு ஞானத்தை தேடியலையும் ரேவ் மக்கள், அராபியப் பழங்குடி, பெர்பெர் பழங்குடி மக்கள் மற்றும் இவர்களின் வாழ்வியல் பதிவுகளின்பால் போர் நெருக்கடியின் உலகளாவிய உணர்வைக் கைப்பற்றவே படம் விரும்புகிறது. கவித்துவமான உண்மை, உண்மையைவிட ஆழமானது. சிராத் திரைப்படம் இன்றைய உலகின் நிச்சயமற்ற தன்மையைப் படம் பிடிக்கிறது. வெளிப்படையான அரசியல் படம் போன்ற உணர்வை ஏற்படுத்தாமல் இருந்தாலும் ஸ்பானிய சமூகத்தின் அரசியல், படத்தின் மூச்சுக் காற்றில் உள்ளது.  நிறுவனமயமாக்கப்பட்ட மனித இனத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பித்து ஒரு சுதந்திர சிந்தனையை வாழ முனைவதே ரேவ் குழுவின் அடையாளம். ஒரு பெருங்கூட்டம் சமூகச் சீர்குலைவிலிருந்து தப்பிப்பதாக எண்ணி அவர்கள் இசையிலும் நடனத்திலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். பாலைவனம் அந்தத் தப்பித்தலின் எல்லை. ஆனால் தப்பித்து வாழ்வதற்கு பாலைவனம் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. அது தண்டிக்கிறது. லாக்ஸ் இந்த நெருக்கடியைதான் படத்தில் காட்டுகிறார்.

கதையில் வரும் தந்தை, எதையோ ஒன்றை இழந்துவிட்ட தலைமுறையின் சின்னமாகவும். மகள், காணாமல் போன எதிர்காலத்தின் அடையாளமாகவும் உருவகப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் புதிய அர்த்தங்களைத் தருமொரு புதிர் போன்றே தோன்றுகிறது முழுப்படமும்.  லாக்ஸ் இயக்கத்தில் மற்றுமொரு நுட்பம், திரைக்கதையின் ஒவ்வொரு காட்சிகளின் நேரத்தையும் அவர் வித்தியாசமாகக் கையாளுகிறார் என்பதே. பாலைவனத்தின் நேரம் வேறு. ரேவ் நிகழ்ச்சியின் நேரம் வேறு. இந்த இரண்டு நேரங்களும் மோதுகின்றன. இறுதியில் பாலைவன நேரமே வெல்கிறது. ‘மனிதனின் செயற்கை உலகத்தின் காலம் என்பது இயற்கையின் காலத்தின் முன் சரிகிறது’ என்ற இதன் அரசியல் பொருள் ஆழமானது.

செர்ஜி லோபஸின் முகத்தில் இழப்பின் புவியியல் வரையப்பட்டுள்ளது. செர்ஜி மட்டும்தான் இந்தப் படத்தின் தூர நிபுணத்துவம் பெற்ற ஒரே நடிகர். செர்ஜி நடிப்பது உணரவே முடியவில்லை. அவர் அங்கு வெறுமனே வாழ்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் தொழில்முறை நடிகர்கள் இல்லை என்றாலும்  அவர்களின் முகங்கள் அந்த நிலவியலின் ஆயிரம் கதைகளைச் சொல்கின்றன. ஒரு தந்தை, தன் மகளைத் தேடுவதுதான் கதையாக இருந்தாலும் உண்மையில் அந்தத் தந்தை அங்கு தன்னையே தேடுகிறார் என்பதை நாம் பாதிப் படத்திலேயே புரிந்துகொள்ள முடியும். மகளைத் தேடும் லூயிஸ் கதாபாத்திரமாக வாழும் செர்ஜி லோபஸின் முகத்தில் உண்மையான வேதனை தெரிகிறது. அவர் பேசும் வார்த்தைகளைவிட அவருடைய முக பாவனைகளே என்னிடம் அதிகம் பேசுகின்றன. படத்தின் இறுதிக் காட்சி என் இதயத்தை உடைத்தது. அது ஒரு பித்துநிலை. நான் சினிமாவை விரும்பக் காரணமே இது போன்ற படங்கள்தாம்.

இந்தப் படத்தின் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி மிகவும் சவாலான வேலையாக இருந்திருக்கிறது. படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்ல. பெரும்பாலும் நிஜமான ரேவ் சமூகத்தைச் சேர்ந்த மனிதர்கள். சினிமா மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நாதியாவே இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒத்திகை கொடுத்து நடிக்கவைக்கும் கடினமான பணியைச் செய்திருக்கிறார். அவர் ஒரு  ‘ட்ரோஜன் குதிரை’ போலச் செயல்பட்டு ரேவ் என்ற நவீன நாடோடிக் குழுவினரின் நம்பிக்கையை முதலில் வாங்கியிருக்கிறார். பின்னர் அவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல் என மூன்று நாடுகளுக்குச் சென்று அந்த மக்களைச் சந்தித்து, படத்தின் முழுத் திட்டத்தையும் விளக்கி, இந்தப் படம் எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆழமான படம் என்பதைப் புரியவைத்து அவர்களிடமிருந்து சிறப்பான ஒத்துழைப்பையும் நடிப்பையும் வென்றெடுத்திருக்கிறார் நாதியா அஸிமி. இவர் இயக்குனர் லாக்ஸின் முன்னாள் மனைவி ஆவார். இவரும் ரேவ் இசையின் தீவிரமான பிரியர். ஒரு நேர்காணலில் இயக்குனர் ஆலிவர் லாக்ஸ், “பதின்ம வயதில் ரேவ் பார்ட்டிகளுக்குச் சென்றிருந்தாலும், நாதியாவுடன் இணைந்த பிறகுதான் இந்த ரேவ் கலாச்சாரத்திற்குள் நான் முழுமையாக நுழைந்தேன். நாங்கள் ஒரு லாரியை எடுத்துக்கொண்டு ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் இதற்காகப் பயணித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ரேவ் இசை, மனிதனின் மூதாதையரின் உணர்வுகளை எழுப்புகின்றன. காங்டிங் ரேவின் இசை படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவே செயல்படுகிறது. ரே, கேன்ஸில் சிறந்த இசைக்கான விருதை வென்றார். அவருடைய  ‘ஆம்பர் டிகே’ என்ற புகழ்பெற்ற பாடல் ஒன்று இருக்கிறது. இந்தப் பாட்டை, கடந்த பத்து வருடங்களாக பலர் கேட்டும் தர மறுத்தவர், ‘சிராத்’ படத்திற்கு மெல்லிய ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார். காங்டிங் ரே உருவாக்கிய இசை, மனிதர்களை அடிமையாக்கும் வகையில் உள்ளது. துடிப்பான தொழில்நுட்ப இசை கதை முழுவதும் ஒலிக்கிறது. ரேவ் கலாச்சாரத்தின் சூழலை முழுமையாக உணர ரேயின் இசை பெரிதும் உதவியிருக்கிறது. பின்னணி இசை மட்டுமில்லாமல் காற்றின் சத்தம், மணலில் நடக்கும் ஓசை என்று இயற்கை ஒலிகளே மீதிக் கதையைச் சொல்கின்றன.

ஒவ்வொரு ஃப்ரேமும் ஓர் ஓவியம் போன்ற பிம்பத்தை தருகிறது. பாலைவனத்தின் வெப்பத்தைத் திரையில் பார்த்து நமது தோள்களில் உணர முடிகிறது. ஒளிப்பதிவே கதைசொல்லலாக மாறி பாலைவனத்தின் கடுமையையும், கதாபாத்திரங்களின் உணர்வற்ற வறட்சி மனநிலையையும் பிரதிபலிக்கிறது. மௌரோ ஹெர்ஸ்  ஒளிப்பதிவு பாலைவனத்தின் அழகையும் அதே சமயம் அதன் கொடூரத்தையும் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது. குறைவான பட்ஜெட்தான் ஒதுக்கப்பட்டு இருந்ததால் பெரும்பாலான படம் 16மிமி ஃபிலிமில் எடுக்கப்பட வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் முடிவெடுத்திருக்கிறார். டிஜிட்டலில் சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துவது கடினம். பெரிய விளக்குகளுக்கு தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. எனவே ஃபிலிமின் இயற்கையான தன்மையை ஒளிப்பதிவாளர் நம்பினார். நம்பிக்கை பொய்க்கவில்லை. சமயோஜிதமாக, படத்தின் இரவுக் காட்சிகளுக்கு மட்டும் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி இருக்கிறார். மணலின் நிறம், வானத்தின் நீலம், இரவின் கருமை என்று அனைத்தும் தரமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனிதர்களைவிட இயற்கையையே முதன்மைப்படுத்தி ஒளிப்பதிவு செய்திருப்பதால் படத்தின் காட்சிகளில் அந்த  இயற்கையின் முன்  மிகச் சிறியவர்களாகவே தெரிகிறார்கள் மனிதர்கள். பாலைவனம், பிரமாண்டமாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. கேமரா மெதுவாக இடது புறத்திற்கு நகர்கிறது. பின்னர் மிகமெதுவாக வலது புறம் நகர்கிறது. அதற்குள் கதை சிறிது முன்னேறுகிறது. ஸ்பானிய மொரோக்கோவின்  ஒரு சமூக ஆவணமாகவும் இந்தப் படம் செயல்படுகிறது.  

ஐரோப்பிய மக்களின் நவீனத்துவ சிக்கல்கள், குடும்பம், இழப்பு, சுதந்திரத்திற்கான தாகம்… இவை அனைத்தும் காட்சிகளின் தொகுப்புகளில்  வெளிப்படுகின்றன. 2025 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி பரிசை வென்ற படம். உலகின் மிகப் பெரிய மேடையான கேன்ஸ் திரைப்பட விழாவில் 2025 மே 15 அன்று சிராத் திரையிடப்பட்டது. 2025 மே 24 அன்று கேன்ஸ் ஜூரி பரிசை வென்றது. ஸ்பெயினில் ஜூன் 6 அன்று வெளியானது. அதற்குப்பின்  ஸ்பானிய அகாடெமி விருதுவிழா நிகரான 11 கோயா விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஒளிப்பதிவு, இசை என ஐந்து விருதுகளை வென்றது. 2026 ஆஸ்கர் விருதில் சர்வதேச திரைப்படப் பிரிவில் ஸ்பெயினின் சார்பாகப் போட்டியிட்டது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகை வென்ற கலைப் படைப்பாக இன்று மாறியிருக்கிறது. வாழ்க்கையில் எத்தனை படங்கள் என்னை இப்படி உலுக்கப்போகின்றன என்று தெரியவில்லை. கடைசியாக தமிழில் பருத்திவீரன் என்னை இப்படி உலுக்கியெடுத்த ஒரு திரைப்படம்.

ஏகப்பட்ட தருணங்களை எழுதி எடுத்திருக்கிறார் இயக்குனர். அவை எல்லாம் திரைக்கதையில் சிறப்பாகப் பொருந்திப்போவதால் ஆழமான உணர்வை ஏற்படுத்துகின்றன. ஸ்பானிய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களின் நவீன வாழ்வின் தத்தளிப்பு, ஒரு தந்தை தன் மகளைப் பற்றிக் கேட்பது, அவளைத் தன் மகனுடன் சேர்ந்து தேடியலைவது, சூரிய ஒளியில் முகம் வாடுவது, இரவில் நட்சத்திரங்களைப் பார்ப்பது, இந்தத் தருணங்களின் தொகுப்புதான் சிராத். மிக நீளமான வசனங்கள் இல்லை. கண்ணீரோ கதறலோ இல்லை. ஆனால் துக்கம் ஒவ்வொரு காட்சியினுள்ளும் ஊறியிருக்கிறது. பாலைவனத்தின் வண்ணங்கள், அந்தி ஒளி, காலைப் பனியே கதையை நகர்த்துகின்றன. பெண்களின் சிரிப்பு, களைப்பு, அசைவு அனைத்தும் வாழ்க்கையை நேசிக்கும் மனநிலையை மனதில் கரைசேர்த்துவிடுகின்றன. இந்தப் படத்தைப் பார்ப்பது காற்றில் மிதக்கும் ஒரு பறவையின் இறகைப் பிடிப்பது போல மிகவும் மென்மையான அனுபவம். அதே நேரம் வலிமையான அனுபவமும்கூட. லாக்ஸ், சினிமாவை ஒரு சமூகச் சடங்காகப் பார்க்கிறார். கிட்டத்தட்ட ஒரு கூட்டுக் கலாச்சாரம். “திரையரங்கத்திற்கு செல்வது ஒரு கதார்சிஸ்” என்கிறார். ரேவ் நடனத்தையும் அப்படியொரு சடங்காகத்தான் பார்க்கிறார்.

 நான் அனுபவித்த முக்கியமான தருணம் எதுவெனில், ஒரு தனிநபர் சொல்லும் கதையாக இதை இயக்காமல் லாக்ஸ் இதை ஒரு சமூகத்தின், கூட்டுக் கதை சொல்லலின் அனுபவமாக திரைக்கதையை வெளிப்படுத்தியிருக்கிறார். எனது பார்வையில் இந்தத் தருணம் உலக சினிமாவின் புதிய திசையை திறந்துவிட்டிருப்பதாக உணர்ந்தேன். ஆவணப்படம் மற்றும் கற்பனைக் கதைக்கு இடையேயான எல்லை இந்தத் திரைப்படத்தில் உடைக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் மிக முக்கியமான குணம் எதுவெனில் எந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தையும் படம் குறிக்கவில்லை. பழைய டிரக்குகள், நவீன இசை, பின்னணியில் போர் என்று எல்லாம் கலந்த ஒரு காலமற்ற உலகத்தைத்தான் படத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். இதுபுரிந்துதான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மௌரோ ஹெர்ஸ். இந்தக் காலமின்மையானது படத்தை ஓர் உருவகமாக மாற்றுகிறது. ஒரு கவிதையைப் போல எல்லாக் காலத்திற்குமான கதையாக சிராத்தை நிற்க வைக்கிறது.

சிராத் படத்தைப் பார்த்தது ஒரு மசாஜ் பெற்ற அனுபவத்தை போன்று இருந்தது. மசாஜ் செய்த உடனே நமக்கு வலி அதிகமாக இருப்பது போல முதலில் தெரியும். அடுத்த நாள் இன்னும் அதிகமாக வலிக்கும். ஆனால் பின்னர் படிப்படியாக குணமடையும். ஒரு நிவாரணம் கிடைத்ததை போன்று உணர்வோம். சிராத் அப்படிப்பட்ட அனுபவம்தான். படத்தை ஜீரணிக்க காலம் தேவை. மசாலாப் படங்களைப் போன்று உடனடி மகிழ்ச்சியைத் தரக்கூடிய படமாக இந்தப் படத்தின் விளைவு இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. மெதுவாக மனதிற்குள் ஊடுருவி சில காலம் கழித்துதான் சிந்தனை, விவாதங்கள், கேள்விகள் என்று இந்தப் படம் வேலை செய்யும். ஓர் உளவியல்  பயணமாகவும் இருக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் காலத்தில், நாடகத்திற்குச் செல்லும்பொழுது அவர்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் செல்லவில்லை; மாறாக அகத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ளச் சென்றதை போன்று, படத்தைப் பார்த்து முடித்தபொழுது ஒரு கதார்சிஸ் ஏற்பட்டது போன்று இருந்தது. உலக சினிமா தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு இது போன்ற கதார்சிஸ் அனுபவம் அடிக்கடி நடப்பதுண்டு. தன்னைத் தானே அழித்துக்கொள்ளாமல் பாதுகாக்கவே, இதுபோன்ற கதார்சிஸ் ஒரு சமூகத்திற்குத் தேவைப்படுகிறது.

இயக்குனர் லாக்ஸின் கூற்றுப்படி, ‘பாலைவனமும் ரேவ் இசையும் ஒருங்கிணைந்து, பார்வையாளனின் உடலை ஒரு வழிபாட்டுத் தலமாக மாற்றுகின்றன’. உலக சினிமாவின் கதைசொல்லல் வரலாற்றில், பயணத்தின் மூலம் கதை சொல்வது என்பது மிகப் பழமையான உத்தி. கில்கமெஷ் காவியம் காலத்தில் இருந்து இந்த உத்தி பயணிக்கிறது. இந்தத் திரைப்பட வடிவம், கதாபாத்திரத்தின் உளவியலைப் பேசுவதற்கு ஏற்ற வடிவம். ஆனால் சிராத் திரைப்படமோ முற்றிலும் வேறொரு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. அது நவீன உளவியல் பயணத்தைக் காட்டிலும், மரபுணர்வைத் தேடும் பயணமாகச் செல்கிறது. ‘நமது மரணத்தை ஒரு நடனமாகக் கற்பனை செய்ய முடியுமா’ என்ற கேள்வியைப் படம் கேட்கிறது. விடையும் கொடுக்க முயன்றிருக்கிறது. கதையை வெறும் தகவலாகச் சொல்வதிலிருந்து, உணர்வுகளை நேரடியாகப் பதிக்கும் ஓர் ஆழ்நிலை அனுபவமாக எதிர்கால சினிமா மாறும் என்பதற்கு சிராத் நிச்சயம் ஒரு முன்னோடியாக இருக்கும்.

இயக்குனர் ஆலிவர் லாக்ஸ், சூஃபி மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டவர். சூஃபி நடனம், தியானம், தத்துவம் ஆகியவற்றை நேரடியாகப் பயிற்சி செய்பவர். இந்த ஆழ்ந்த அனுபவமே படத்தின் ஆன்மாவாக வெளிப்படுகிறது. ரேவ் நடனம் என்பது பயிற்சி செய்யும் ஒரு நவீன சூஃபி அவ்வளவே. ‘கடவுள் முன் நடனமாடுவது’ என்கிறார். நீட்சே மற்றும் ரூமியின் தாக்கம் சிராத் திரைப்படத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ரேவ் கலாச்சாரத்தின் இசையும் நடனமும் தெய்வீகப் பரவசத்தைத் தேடும் வழிமுறைகள். மனித நாகரீகத்தின் விளிம்பில் வாழும் அந்த மனிதர்கள், ரேவ் கலாச்சாரத்தை வாழ்வியலாகப் பின்பற்றுவதன் மூலம் தங்களின் சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற்றவர்களாக உணர்கிறார்கள். தனிமனித சுதந்திரமே அவர்களின் மதம்.

மகளைத் தேடும் லூயிஸ் முதலில் ஒரு தவிப்பான தந்தையாக இருக்கிறார். வழக்கமான உலகின் அடையாளமாக அவர் இருக்கிறார். ரேவ் குழுவினர் தீவிர மாற்று வாழ்க்கை முறையின் சின்னமாக இருக்கிறார்கள். அவர்கள் பலவிதமான அகப்புற தழும்புகளைக் கொண்டவர்கள். தேடும் படலத்தினூடே இந்தக் குழு லூயிஸிற்கு ஒரு மாற்றுக் குடும்பமாக மாறுகிறது. மெதுவாக லூயிஸ், அவர்களின் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறார். அவரது பரிதவிப்பு மெல்ல மறைகிறது. இறுதியாக, விதியை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார். மொராக்கோவின் அந்த பாலைவனமே படத்தின் முக்கியக் கதாபாத்திரமாகத்தான் இயங்குகிறது. எல்லையற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும் அது இருக்கிறது. ஒரே சமயத்தில் அது அழகானதாகவும் இருக்கிறது அதே சமயம் மிகக் கொடூரமானதாகவும் இருக்கிறது. மனித அகந்தையை அது தூள்தூளாக்குகிறது. இயற்கை, மனிதர்களை ஆடையின்றி அம்மணமாக நிறுத்துகிறது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான மோதலை இந்த சிராத்தின் திரைக்கதை பேசுகிறது.

ஒளிப்பதிவாளர் மௌரோ ஹெர்ஸுக்கு இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மாபெரும் சவாலாக இருந்திருக்கிறது. 80% படம் வெளிப்புறத்தில், எரியும் வெயிலில்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயற்கை ஒளியின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். சூரிய வெப்பத்தின் கொடூரம் திரையில் தெரிகிறது. படக்குழுவினர் கடும் வெப்பத்தையும் மணற்புயலையும் எதிர்கொண்டு இருந்திருக்கின்றனர். குழுவின் லென்ஸ்களும் உபகரணங்களும் மணற்புயலால் உடைந்திருக்கின்றன. கூடாரங்கள் எந்நேரம் வேண்டுமானால் காற்றில் பறக்கலாம் என்ற  அபாயம் இருந்திருக்கிறது. மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் எல்லாமே படக்குழுவிற்கு சவாலாக இருந்திருக்கிறது. இதனால் படப்பிடிப்பு மாபெருமொரு நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து முடிந்திருக்கிறது. ‘இயற்கையிடம் நாம்  கட்டளையிட முடியாது, இயற்கையை நாம் புரிந்துகொண்டு அதன்படி கேட்டுத்தான் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று படக்குழுவிடம் உரையாடிப் புரியவைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் இறுதிக் காட்சியில், தீர்வைக் கொடுக்காமல் மனிதர்களின் பிழைத்தலைக் காட்டுகிறது படம். இதுவே நவீன மனிதனின் நிலை. அர்த்தமற்ற பிரபஞ்சத்தில் அர்த்தத்தைத் தேடுமொரு போராட்டம். ஒரு  சூஃபி மனநிலை  படம் முழுவதும் ஊடுருவியிருக்கிறது. படத்தில் வரும் ரேவ் குழுவினர் அனைவரும் மனமுடைந்து போனவர்கள்,  மாற்றுத் திறனாளிகள் என்று சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர்கள். ‘காயங்களைக் கொண்டாடுவதே’ ரேவ் நடனம் என்று லாக்ஸ் கூறுகிறார். இயக்குனர் ஆலிவர் லாக்ஸின் பார்வையில் இந்தப் படம் மனித இருப்பின் நிலையற்ற தன்மையைப் பற்றிப் பேசும் படம். இப்படம் மிகவும் இயல்பான மனிதர்களைப் பற்றியது. வாழ்க்கையில் அவர்களுக்கான இடம் தெரியாமல் தவிப்பவர்கள். சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியவர்கள். ரேவ் கலாச்சாரம் ஒரு தப்பித்தலின் சடங்கு. அதிகாரத்தின் நசுக்கலிலிருந்து தப்பும் முயற்சி.

விரும்பப் படவேண்டிய பாத்திரங்களாக இல்லாமல் கவனிக்கப் படவேண்டிய கதாபாத்திரங்களை எழுதி கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். சினிமாவின் வசதியான நாயகன் – வில்லன் பிம்பங்களை உடைத்து, அசௌகரியமான மனித நிலையைக் கதையாக எழுதி, கலையாக வெளிப்படுத்தியிருக்கிறார். நான் சதுரகிரி மலையை முதலில் ஏறும்போது மணி நடுநிசி ஒன்று. அப்போது ஒரு நாய்தான் எனக்குத் துணையாக வந்தது. டார்ச் லைட்டைத் தவிர்த்து வேறேதும் ஒளியூடுருவல் இல்லாத கும்மிருட்டு. காட்டுமலைப்பாதையில் உச்சியின் வளையப்பாதைவரை உடன் வந்த நாய், அங்கே என்னை விட்டுவிட்டு, காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டது. அந்தப் பயணத்தை நினைவுபடுத்துவது மாதிரி இந்தப் படத்தின் நட்சத்திரம் ஒரு நாய். ரேவ் குழுவுடன் பயணிக்கும் பிப்பா என்ற அந்த நாய் மிக முக்கியமான கதாபாத்திரமாக வருகிறது.  ஒரு நம்பிக்கையின் சின்னமாகவும் உதவுகிறது.

இப்படம் இரண்டு உலகங்களையும்கூட மோதவிடுகிறது. ஒன்று, பாரம்பரிய மொராக்கோ. மற்றது, நவீன ஐரோப்பிய ரேவ் கலாச்சாரம். மலைவாழ் மக்கள், அவர்களின் நம்பிக்கைகள், பின்னணியில் ஒலிக்கும் தொழுகை. மறு புறம், இசையில் மூழ்கித் திளைக்கும் தற்கால இளைஞர்கள் என்ற இந்த மோதலில் யாரும் வெல்வதில்லை. இரண்டும் அவற்றின் இடத்தில்தான் நிற்கின்றன. முக்கியமாக, தந்தையின் பயணம் ஒரு மத்தியமமான நிலையில் நிற்கிறது. அதாவது, பழைய மதிப்பீடுகள் உடைந்து புதியவை இன்னும் மனதினுள் உருவாகாத ஒரு நிலை. ஆழ்மனதிற்கான சுவடே தெரியாததொரு மனநிலையின் குழப்பமே படத்தின் கேள்வி. முடிவில் உடல்கள் மறைகின்றன. வெறும் ஆன்மாக்கள் மட்டுமே எஞ்சுகின்றன. சிராத் என்ற முடியினும் மெல்லிய பாதையை ‘தனித்தே கடந்து ஒவ்வொரு மனிதனும் அந்தப் பாலத்தின் முன் தன்னந்தனியே நிற்கிறான்’ என்ற தத்துவத்தைப் படம் நிறைவடையும்போது உணரமுடிந்தது.

Author Image

கிருஷ்ண பிரசாத்

ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்சு, இத்தாலிய திரைப்படங்களில் ஆழ்ந்த அறிதல் கொண்டவர். இலக்கியத்தையும் உலக சினிமாவையும் இணைக்கும் பாலமாகத் தன் கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

About The Author

The Talkie

The Talkie

See author's posts

Next Post

கரு உரு

Please login to join discussion

Archives

  • Trending
  • Comments
  • Latest
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

June 6, 2025
AMADEUS திரைக்கதை

AMADEUS திரைக்கதை

March 15, 2025
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

March 19, 2025
Naayagan Re-release

தமிழ் சினிமாவின் நாயகன்

November 15, 2025
Thug_Life_

Thug Life – ஒரு பார்வை

11
rasigamagajanangale

ரசிக மகா ஜனங்களே

7
gurudutt-02

குருதத்தின் ப்யாஸா- உயிர்த்தெழுந்த தேவதை        

5
start camera

ஸ்டார்ட் கேமரா! வின்சென்ட் மாஸ்டர் – 01

4

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

மைக்கேல் – குழந்தைமையின் ஆன்மிகம்

June 1, 2026
The Talkie

சினிமா அற்புதமான ஊடகம். இதனை அறிந்து கொள்ளவும், ரசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கிற இணைய இதழ் இது. மேதைகளின் நேர்காணல்கள், திரைக்கதைகள், வெவ்வேறு மொழித் திரைப்படங்கள், ஆளுமைகள், திரைப்படப் புத்தகங்கள் , சினிமா ரசனை என சினிமா உலகத்தோடு இணைந்திட எங்களுடன் இணைந்திடுங்கள்.

Categories

  • I CALL THE SHOTS
  • ஆளுமைகள்
  • இந்தியத் திரைப்படங்கள்
  • உரையாடல்
  • உலகத் திரைப்படங்கள்
  • ஓடிடி திரை
  • கட்டுரைகள்
  • குரு தத் 100
  • டேபிள் டாப்
  • ட்ரெண்டு கொட்டாய்
  • தமிழ்த் திரைப்படங்கள்
  • திரை புத்தகம்
  • திரைக்கதைகள்
  • தொடர்கள்
  • ஸ்டார்ட் கேமரா

Site Navigation

  • About Us
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Returns and Cancellation
  • Shipping Policy
  • FAQ

தலைக்குள் என்ன?

June 1, 2026

நீளிரா – நினைவுகளுக்கான போராட்டம்!

June 1, 2026

தோழிக்கு ரோஜா காதலிக்கு முள்

June 1, 2026

© 2026 Thetalkie - All rights reserved

Welcome Back!

Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • thetalkie
  • ஆளுமைகள்
  • திரைக்கதைகள்
  • உரையாடல்
  • கட்டுரைகள்
    • இந்தியத் திரைப்படங்கள்
    • உலகத் திரைப்படங்கள்
    • தமிழ்த் திரைப்படங்கள்
    • ஓடிடி திரை
  • தொடர்கள்
    • ட்ரெண்டு கொட்டாய்
    • திரை புத்தகம்
    • ஸ்டார்ட் கேமரா
    • I CALL THE SHOTS
    • குரு தத் 100
    • டேபிள் டாப்
  • தொடர்பு
  • Login
  • Cart

© 2026 Thetalkie - All rights reserved

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?